தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டையும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இது இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் ஆகும்.இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் வாசிப்பார். அப்போது தமிழக அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இது வரி இல்லாத பட்ஜெட் ஆக இருக்குமா?, வரிச்சலுகைகள் இருக்குமா? அல்லது புதிய வரிகள் விதிக்கப்படுமா? என்பதை பட்ஜெட் தாக்கல் செய்திப்பிறகு தெரியவரும்.
பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட வேண்டும்? என்பது உள்பட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும். அதுபற்றி சபாநாயகர் ப.தனபால் இன்று அறிவிப்பார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யமாட்டார்கள் என எதிர்க்கட்சியான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருப்பதால், சபையில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கிளப்பும் என்று கருதப்படுகிறது.