சென்னை: கொடிய நோய்க்கிருமியானது, அனைத்து தொழில்களிலும் ஊடுருவி தொழில்களை பலவீனப்படுத்தி விட்டு, விஸ்வரூபம் எடுத்து உலகையே ஆட்டிப் படைக்கிறது.  அதிலும் குறிப்பாக நேரில் சந்திக்க வேண்டியிருக்கும் தொழில்கள் அனைத்தும் அடியோடு முடங்கிப் போயிருக்கின்றன.   நீண்டகாலமாக முடக்கநிலை அமல்படுத்தப்பட்டு வைரஸால் உயிராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, பிற அனைத்தையும் விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நோயின் தாக்கத்தைக் குறைப்பதில், சமூக விலகல், தனிநபர் இடைவெளி என்பது போன்ற பலவிதமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதால், நாடு முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கே திண்டாடுகிறார்கள்.


35 வயதான பாலியல் தொழிலாளி சுனிதா (பெயர் மாற்றப்பட்டது) கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருக்கிறார். ஆனால், தினசரி இரவு நேரத்தில் தனது குழந்தைகள் தூங்கியபிறகு, தன்னை அலங்கரித்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வீடியோ அழைப்புகளைச் செய்வதற்காக மொட்டை மாடிக்குச் செல்கிறார்.  இதுதான் அவருக்கு குடும்பத்தை நடத்த ஆதாரமாக ஓரளவிற்கு வருவாயையும் பெற்றுத் தருகிறது.  


எதுவுமே இல்லாமல் இருப்பதை விட ஓரளவு சம்பாதிப்பது நல்லது


கொரொனா பெருந்தொற்று தொடங்கியதும்  வருமானம் குறையத் தொடங்கி விட்டதாக கூறுகிறார் சுனிதா. பணம் சம்பாதிக்க வேறு வழியில்லாத நிலையில், சில வாரங்களுக்கு முன்பு தனது வாடிக்கையாளர்களுக்கு வீடியோ மூலம் அழைத்து பேசத் தொடங்கினார். வெறுமனே அமர்ந்திருப்பதைவிட ஏதோ ஒரு தொகை கிடைத்தால் குடும்பத்தை நட்த்த முடியும் என்று அவர் நினைக்கிறார். 


e-Wallet  மூலம் பணம் செலுத்துதல்


COVID-19-இன் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்னெட் வசதி கொண்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் வர்த்தகத்தை ஆன்லைனில் செய்யும் கட்டத்திற்கு நகர்ந்து விட்டனர்.  அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் வீடியோ காலிங் செய்து பேசுகின்றனர்.  அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேசி மகிழ்விக்கின்றனர்.  GPay போன்ற e-Wallet மூலம் தங்கள் சேவைக்கான கட்டணங்களை பெற்றுக்கொள்கிறார்கள். பாலியல் தொழிலாளர்களின் மொபைல் கணக்கில் போதுமான பண இருப்பு இல்லை என்றால், வாடிக்கையாளர்களே மொபைல் ரீசார்ஜ் செய்கிறார்கள்.


பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகளில் 90 சதவீதம் பேர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்


பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகள், வீடியோ மூலம் பாலியல் சேவைகளை வழங்குவது ஒப்பீட்டளவில் எளிதாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறர்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, திருநங்கைகளின் பாலியல் தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் பெண் பாலியல் தொழிலாளர்களில் 30 சதவீதத்தினரிடமே ஸ்மார்ட் போன்கள் உள்ளன. 


இளம் பாலியல் தொழிலாளர்கள் தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாக அணுகுவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணிபுரியும் தன்னார்வலர்  ராஜேஷ் உமா தேவி கூறினார். வீடியோ அழைப்புகளை மக்கள் பதிவுசெய்யக்கூடும் என்பதால் அந்தரங்கம் பறிபோகலாம் என்பது உட்பட பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் தற்போது, கொரோனா என்ற பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள போர் போன்ற சூழலில், தங்களை தற்காத்துக் கொள்ளும் ஆயுதமாக தொழில்நுட்பத்தையே பாலியல் தொழிலாளர்கள் நம்பியுள்ளனர் என்று நிதர்சனத்தை கூறுகிறார் தன்னார்வலர் ராஜேஷ் உமாதேவி.


(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச் செல்வன்)