பெரியாரின் பண்பு தமிழ் சமூகத்திடம் இருக்கிறதா? கேள்வி எழுப்பிய ராமதாஸ்
தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் கொண்டாடுகிறோம். ஆனால் அவரது பண்பு இன்று தமிழ் சமூகத்திடம் இருக்கிறதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் நாள் தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் கொண்டாப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி உலக முழுவதும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் கொண்டாடுகிறோம். ஆனால் அவரது பண்பு இன்று தமிழ் சமூகத்திடம் இருக்கிறதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுக்குரித்து அவர் தனது முகநூலில் கூறியதாவது:
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு தந்தை பெரியார் கொடுத்த முக்கியத்துவம்!
கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.
கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.
நாத்திகத்தை திணிக்காத தந்தை பெரியார்!
தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?
மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் ‘ஊழலுக்கு ஒன்பது வாசல்’ என்ற நூலின் ‘ஏனெனில், அவர் பெரியார்’ என்ற அத்தியாயத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.