ஆசிரியர் தகுதி காண் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்
தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70-ல் படி, 2019 ஆசிரியர் தகுதிகாண் தேர்வில் தமிழ்ப் பண்டிதர்கள் தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70-ல் படி, 2019 ஆசிரியர் தகுதிகாண் தேர்வில் தமிழ்ப் பண்டிதர்கள் தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரையிலும், மதுரை தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, நா.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி, மயிலம் தமிழ்க்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில், தமிழ் இலக்கியச் செறிவு, தமிழ் இலக்கிய ஆளுமை, இலக்கணப் புலத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழ் மரபுக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இப்போது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் தமிழ்ப்புலமை வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
3 ஆண்டுகள் தமிழ்ப் புலவர், இளங்கலை இலக்கிய இளையர் (பி.லிட்) படித்து, அதன் தொடர்ச்சியாக 6 மாத தமிழ்ப் பண்டிதர் பயிற்சியும் முடித்தவர்களுக்கு, 1987 முதல் அரசுப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அவர்கள், தகுதி நிலை 1, தகுதி நிலை 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
6 ஆம் வகுப்பு முதல் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் பி. விருத்தாசலனார், பெரும்புலவர் கி.த. பச்சையப்பன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 2009 இல் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது பிறப்பித்த அரசு உத்தரவின்படி, மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இவர்கள், இளங்கலை இலக்கிய இளையர் (Bachelor of Oriental Literautre) பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக, புலவர் என்ற தகுதியோடு, தனித்தமிழ் ஆசிரியர்கள் என அழைக்கப்பட்டு வந்தனர்.
அதன்படி தமிழ்நாட்டில், மொழிப்பாட ஆசிரியர்கள், கல்வியியல் கல்விக்கு (பி.எட்) இணையாகக் கருதப்பட்டுகின்றது.
2012 ஆம் ஆண்டு நடுவண் அரசு வெளியிட்ட அரசு அறிவிப்பு ஆணையின்படி, “ஆசிரியர்களுக்குத் தகுதி காண் தேர்வு நடத்த வேண்டும்; மொழி ஆசிரியர்கள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்ட முடிவின்படி, தமிழ்ப்புலமைப் படிப்புகளில் தகுதி பெற்றவர்கள், கடந்த 2017 வரையிலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வு (Teacher’s Eligibility Test-TET) எழுதி உள்ளனர். ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70 இல், ஆசிரியர் தகுதிகாண் தேர்வு 2019 இல், தமிழ்ப் பண்டிதர்கள், தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதனால், 40,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பண்டிதர்கள், தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்துள்ளனர். வழக்கு எண். WP/13537/2019; WMP/13627/2019; WMP/13636/2019; WMP/13741/19.
எனவே, தமிழக அமைச்சரவை இந்தப் பிரச்சினையில் விரைவில் முடிவு எடுத்து, தமிழ்ப் பண்டிதர்கள் தகுதித் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.