நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.


முன்னதாக இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் வரும் தேர்தலில் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டியளித்தார்.


செய்தியாளர் சந்திப்பின் போது அவர்., "பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


15 நாட்களாக குடல் நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுவதுமாக சரி ஆகிவிடும். நான் இதுவரை எந்த கட்சியிலும் தேர்தல் கூட்டணியில் இடம் பெறவில்லை. மக்களின் பிரச்சினைகள் அதிக அளவில் இருப்பதால் முதலில் அதற்கான கவனம் செலுத்தி வருகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.



தொடர்ந்து பேசிய அவர் ராமதாஸ், விஜயகாந்தை பற்றி விமர்சித்துவிட்டு தற்போது அவர்கள், இருக்கும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார். இதை, உலகமே கழுவி ஊற்றுகிறது. விஜயகாந்த் நல்ல மனிதர், பிரேமலதா பற்றி மாற்று கருத்து இருக்கிறது. விஜயகாந்த் போல அரசியல் செய்ய விரும்பவில்லை. பாஜக-வை அகற்றுவது எனது நோக்கம், மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.


ராமதாஸ் ஒவ்வொரு முறையும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார். குடும்பத்திற்கு மட்டும் சீட் வாங்கி வருகிறார்" என இருவரையும் விமர்சித்து பேசினார். 


இந்நிலையில் தற்போது திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.