சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?... அண்ணாமலை கேள்வி
திமுக தலைவர்களும், அமைச்சர்களும் தங்களது சொத்து விவரங்களை மக்கள் முன்னிலையில் வெளியிட தயாரா என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து செய்யப்பட்டது. 500 வாட்ச்களில் 149ஆவது வாட்ச் தன்னுடையது என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியது. மேலும் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? என ட்வீட்களால் துளைத்தெடுத்தார். செந்தில் பாலாஜி மட்டுமின்றி திமுகவினர் பலரும் அண்ணாமலையை விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்,
என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?" என குறிப்பிட்டிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ