சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.12.2019) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.


மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை – ஜெ.ஜெ.நகர் கிழக்கு, புலியூர், மந்தவெளிப்பாக்கம் மற்றும் மதுரை – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 33 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.


இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கையில்., அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக கட்டித் தரப்படும் என்று செல்வி ஜெயலலிதா அவர்கள் கடந்த 15.9.2015 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்கள்.


அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் சுயநிதி திட்டத்தின் கீழ், 2.46 ஏக்கர் பரப்பளவில், தூண் தளம் மற்றும் 15 தளங்களுடன், 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். 


இக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 688 முதல் 721 சதுர அடி கட்டட பரப்பளவுடன், இரண்டு படுக்கை அறைகள், கூடம், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டப் பகுதியில் குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, மின் மோட்டார் அறை, மழைநீர் சேகரிப்பு வசதிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.


மேலும், சென்னை, முகப்பேர், ஜெ.ஜெ நகர் கிழக்கு திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, புலியூர் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 11 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, மந்தவெளிப்பாக்கம் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; மதுரை மாவட்டம் - மதுரை வடக்கு வட்டம், சாத்தமங்கலம் கிராமம், அண்ணா நகரில், தூண் தளம் மற்றும் மூன்று தளங்களுடன், 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம்; என மொத்தம் 162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.பி.கே. வைரமுத்து, தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் (பொறுப்பு) திரு. ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.