திண்டுக்கலில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்...
திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரையாற்றினார். தனது பேருரையின் போது அவர் தெரிவிக்கையில்., நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா அச்சத்தை போக்க பல சுகாதாரத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்., திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்தில் அமையவுள்ள அரசு மருத்துக்கலூரிக்கு இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அடியனூத்து ஊராட்சியில் நடைப்பெற்ற இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். அரசு மருத்துவக் கல்லூரி, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அணைக்கட்டு, தடுப்பணை என ரூ.340.86 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து வேளாண் சேமிப்பு கிடங்கு, தடுப்பணை, காவலர் குடியிருப்பு, பள்ளி கட்டிடம் சீரமைப்பு, கால்நடை மருந்தகம், வேளாண் கூட்டுறவு சங்கம் நவீனப்படுத்துதல், மனநல காப்பக கட்டிடம் என ரூ.14.02 கோடி மதிப்பிலான 45 கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
மேலும் மருத்துவத்துறை, வனத்துறை, சமூகப் பாதுகாப்பு திட்டம், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதியோர் உதவித்தொகை, முத்ரா கடன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற்ற 25 ஆயிரத்து 213 பயனாளிகளுக்கு ரூ.63.54 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் அவர் வழங்கினார்.
முன்னதாக இங்கு அமையவிருக்கும் கல்லூரிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.