ஸ்டெர்லைட் எதிப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் வாரிசுகள் 19 பேருக்கு அரசு பணி நியமன ஆணையினை முதல்வர் வழங்கினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2018) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.


தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 27.5.2018 அன்று உத்தரவிட்டிருந்தவாறு காசோலை வழங்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார்கள்.


அதனைத் தொடர்ந்து இன்று (27.9.2018) மொத்தம் 18 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களிடம் இருந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டவர்கள், தங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவிகளையும், தேவையான நிவாரண உதவிகளையும், மருத்துவ வசதிகளையும் வழங்கியதோடு, குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பு ஆணை வழங்கியமைக்காக, முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.


இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் முனைவர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., பொதுத்துறை துணைச் செயலாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.