அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் மக்களின் கூட்டம் அலை கடலாய் அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில், கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 16 தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும், காஞ்சிபுரம் நகராட்சிக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆட்சியர், ஆய்வாளர் விழிப்புடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளை விரைவுபடுத்த, கூடுதல் துப்புரவு பணியாளர்களை, சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனிடையே, அத்திவரதரை தரிசிக்க இன்று சுமார் 4 லட்சம் பேர் திரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டம் அதிகரிப்பு காரணமாக பக்தர்கள், சுமார் 5.கி.மீ., தூரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.