ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 


ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜட்டில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்...


  • சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கீடு.

  • இயற்கை மரணத்திற்கு ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அளிக்கப்படும்.

  • வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம்.

  • விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை.

  • ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன்

  • சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு

  • சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை.

  • வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு.

  • சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு.

  • திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம்.

  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி நிதி.

  • மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள்.

  • மேலும், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.