தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளதா என்பது குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., தமிழகத்தில் உள்ள சில இடங்களில் பள்ளிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து எங்களது கவனத்துக்கு வரவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்களில் உள்ள நிதிகளைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


தண்ணீர்ப் பிரச்னை தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதற்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தண்ணீர்ப் பிரச்னை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.


மேலும் தமிழகத்தில் 37,000 நடுநிலைப் பள்ளிகள், 7,500 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பிரச்சனை எங்கும் இல்லை.


காஞ்சிபுரத்தில் தண்ணீர்ப் பிரச்னைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி தவறானது. 2017-2018 -ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும். தேச பக்தியோடு வாழ்வதற்கும், பெற்றோர்களை நேசிப்பதற்கும், கல்வியோடு ஒழுக்கத்தை வளர்க்கவும் வாரத்துக்கு ஒரு நாள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். 


தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அரசால் வழங்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் தவிர்க்கவும், எவ்வாறு உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது, பொறாமை இல்லாமல் சகோதர உணர்வுடன் வாழ்வது என்பன உள்பட 11 விதமான பயிற்சி அளிப்பதற்காக மெக்சிகோ நாட்டில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.


இதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.