தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி குறித்து இஸ்ரேல் தொழில்நுட்பக் குழுவுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோட்டக்கலை உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் சாகுபடிக்கேற்ற உகந்த தட்பவெப்பம் நிலவுவதால், பலவகைப்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 


தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்திய-இஸ்ரேல் வேளாண்மைத் திட்டத்தின் கீழ், காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியினை இஸ்ரேல் நாட்டின் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நவீன வேளாண் சாகுபடி முறைகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதி வாய்ப்பை பெருக்கவும் இரண்டு மகத்துவ மையங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி என்ற இடத்தில் 22 எக்டர் பரப்பளவில் ரூ.8.80 கோடி செலவில் கொய் மலர் மகத்துவ மையம் ஒன்றும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் என்ற இடத்தில் 5.33 எக்டர் பரப்பளவில் சுமார் ரூ.10 கோடி செலவில் காய்கறிகளுக்கான மகத்துவ மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.


உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்டு சூழலில் கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், நவீன நுண்ணீர் பாசனம் மற்றும் உரப் பாசனம் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாகுபடி குறித்த பயிற்சி அளித்தல், தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கவும் இந்த மகத்துவ மையங்கள் பயன்படுகின்றன. மேலும், ஏற்றுமதிக்கு உகந்த உயர்தர மலர்கள் உற்பத்தி செய்யவும் மையங்கள் உரிய தொழில்நுட்பங்களையும் வழங்குகின்றன. 


இவ்விரு மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், இம்மையங்கள் மூலம் அதிகளவில் விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப அலுவலர்களுக்கும் பயிற்சி அளிப்பது குறித்தும் இஸ்ரேல் தொழில்நுட்பங்களை தமிழக தோட்டக்கலை விவசாயிகள் பயன்படுத்தும் வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர், இரா.துரைக்கண்ணு அவர்கள் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப. ஆகியோருடன் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் திருமதி. தானா குர்ஷ் மற்றும் திரு.ஏரியல் ஸீட்மென் ஆகியோர் கலந்தாலோசித்தனர்.