காவேரி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க புது திட்டம் -முதல்வர்!
மாசுபடுவதிலிருந்து காவேரி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க, `நடந்தாய் வாழி காவேரி` என்ற திட்டத்தினை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாசுபடுவதிலிருந்து காவேரி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க, "நடந்தாய் வாழி காவேரி" என்ற திட்டத்தினை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110–ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,
‘வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று’
அதாவது, மழை பெய்தால் தான் உலகில் வளம் கொழிக்கும். எனவே, அதை ‘அமுதம்’ என்று கருத வேண்டும் என்றார் வள்ளுவர் பெருந்தகை.
சோழர்கள் காலத்திலிருந்தே சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஏரிகளை கட்டுவதற்கும், திறமையான நீர் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பெயர் பெற்றதாக விளங்கி வருகிறது. நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்மா, மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறைப்படுத்தினார். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, மழை நீர் சேகரிப்பதை முன்னெடுத்து செல்ல பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 89 அணைகளில் 238.58 டி.எம்.சி. அடி நீரும், 14,098 பெரிய பாசன ஏரிகளில் 521 டி.எம்.சி. அடி நீரும், ஆகமொத்தம், 759.58 டி.எம்.சி. அடி நீரை தேக்கி வைக்கும் திறன் பெற்றுள்ளது. இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ள 48,758 குட்டைகள், ஊருணிகள், நீர்நிலைகள் மற்றும் குளங்கள், நீரினை தேக்கி வைக்கப் பயன்படுகின்றன.
நிலத்தடி நீரை செறிவூட்டி…
மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், வரும் காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தீவிர நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த மக்கள் இயக்கத்தில், கீழ்க்காணும் வழிமுறைகளை அம்மாவின் அரசு கண்டறிந்து செயல்படுத்த உள்ளது என்பதை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல்
நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல்
வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல்
பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல். இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல்
ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல்.
இந்த தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, எனது தலைமையின் கீழ், இவ்வரசால் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் கொண்ட குழுவின் ஆலோசனையுடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழகத்தின் மூலம் உரிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படும்.
இச்செயல் திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையேற்று, அவர்கள் கீழ் உள்ள பலதரப்பட்ட துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும். கீழ்மட்டத்தில் நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்துகொண்டு செயல்படுவதை இத்திட்டம் உறுதி செய்யும்.
ஒரு சிறப்பு முயற்சியாக, இந்த நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரச்சார இயக்கம் 2019, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்பர். மாவட்ட ஆட்சியர்கள், இத்தீவிர இயக்கப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவர். இந்த இயக்கத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, பொது மக்களின் பங்களிப்பு, அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தின் மூலம் பருவமழை காலத்திற்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி, அதிக அளவு மழை நீரை சேமிக்க வழி வகை செய்யப்படும்.
ரூ.500 கோடியில் நிர்வாக ஒப்புதல்
குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், 2019–2020-இல் 499.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 1829 பணிகளும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக, காவேரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளும், இந்த தீவிர இயக்கத்தில் முக்கிய பணிகளாக செயல்படுத்தப்படும்.
இத்தீவிர பிரச்சார இயக்கத்தின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கிராமம் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி 750 கோடி ரூபாயுடன், கூடுதலாக சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கி, மொத்தம் 1,250 கோடி ரூபாய் நிதி இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
மேலும், சென்னை மாநகரத்திலுள்ள 210 நீர்நிலைகளில், 114 நீர்நிலைகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 8.7.2019 அன்று இம்மாமன்றத்தில் அறிவித்தார். இத்தீவிர இயக்கத்தை செயல்படுத்தும் வகையில், இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
15.7.2019 அன்று இப்பேரவையில் நான் நீர் மேலாண்மை தொடர்பாக பல அறிவிப்புகளை அளித்தேன். இத்தீவிர இயக்கத்தை செயல்படுத்தும் வகையில், இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீண்ட கால செயல்பாடுகளாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெள்ளநீர் சேகரிப்பு
மழைக்காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல். கோதாவரி காவேரி ஆறுகளை இணைக்க மத்திய அரசுடன் அம்மாவின் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளுதல்.
நிலத்தடி நீர் செறிவூட்டும் திறனை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக அதிநுகர்வு மற்றும் அபாயகரமான குறுவட்டங்களில், பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல்.
வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் மானாவாரி வேளாண்மைக்காக நீர் சேகரிப்புத் திட்டம் போன்றவை ஊக்கப்படுத்தப்படும்.
கழிவுநீரை மறு சுழற்சி செய்து மறுபயன்பாடு செய்வதன் மூலம், நன்னீருக்கான தேவையை குறைத்தல்.
சுத்திகரிக்கப்பட்ட நீரை மறு பயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட இருக்கிறது. தற்போது சென்னை மாநகரில், பெறப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் ஆகும். இதில் நாளொன்றுக்கு 34 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக மறு உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டு, மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல, 1,700 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவு நீரை நவீன தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி சுத்திகரித்து அதன்மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை தொழிற்சாலை பயன்பாடு மற்றும் நிலத்தடி நீரை செறிவூட்ட ஏரிகளில் நிரப்புதல் உட்பட பிற பயன்பாட்டிற்கான திட்டத்தை 11.7.2019 அன்று இப்பேரவையில் நான் ஏற்கனவே அறிவித்தேன். இப்பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல்
பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
அம்மா தமிழ்நாட்டிலுள்ள பல நீர்நிலைகளின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும், பேணிக் காக்கவும் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். குறிப்பாக, ஊட்டி ஏரி, சென்னையிலுள்ள சேத்துப்பட்டு ஏரி உள்ளிட்ட பல ஏரிகள், பல கோயில் குளங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பல்வேறு பறவைகள் சரணாலயத்திலுள்ள நீர்நிலைகள் ஆகியவற்றை 176.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த உத்தரவிட்டார். அம்மாவின் அரசும் சுற்றுச்சூழல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல பணிகளை செய்து வருகிறது. இது போன்ற பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இந்நிலையில், ஒரு முக்கிய திட்டமாக, காவேரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ‘‘நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டத்தினை தொடங்க அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இத்தகைய குறுகிய கால மற்றும் நீண்ட கால முயற்சிகளை தமிழ்நாடு நீர் வள ஆதார மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் விரிவாகக் கையாண்டு செயல்படுத்துவதை அம்மாவின் அரசு கண்காணிக்கும். இதனால், தமிழ்நாட்டின் நீர் வளம் பாதுகாக்கப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு, வருங்காலத்தில் தமிழ்நாட்டில் நீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இந்த நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் பொதுமக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும் மற்றும் தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்று, மாநிலத்தின் ஒட்டு மொத்த நலனை பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்களும், இந்த தீவிர இயக்க செயல்பாட்டுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.