ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நாளை நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஊதியம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.


கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கும் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.


அதன்படி நாளை (ஜனவரி 22) தமிழகம் முழுவதும் வட்டம் அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் மறியல் போராட்டமும், 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


மேலும் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.


இதற்கிடையில் தற்போது தமிழக அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டால் அவர்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் நாளை காலை 10.15 மணிக்குள் ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு தவிற, இதர விடுப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.