குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை ஆரம்பித்ததில் இருந்தே தண்ணீர் பஞ்சம் காரணமாக மக்கள் பகல் இரவு பாராமல் தண்ணீருக்காக குடங்களை தூக்கிக் கொண்டு அலையும்  காட்சி ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. தண்ணீர் வழங்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் காலிக்குடங்களை சாலையில் வைத்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. சராசரி மழையை விட குறைவாக மழைப் பெய்ததே இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். 


மேலும், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. 


இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் வரும் 27 ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய கூட்டத்தொடர் தாமதமாக 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.