தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை இணையத்தில் வெளியிட கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற செய்ய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை, எனவே தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தை போல், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலிலும் வாக்காளர் பட்டியலை வெளியிட அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. 


அதேப்போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்படுவோரின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள்  சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அமர்வு, இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.