தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை புதுடெல்லியில் வைத்து தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் பி. தங்கமணி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார். 


இதன் போது தமிழகத்தில்  சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவற்றை மேலும் குறைப்பதற்கு பகிர்மான மின் மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்த வேண்டும். மின் மாற்றிகளில் முழுமையாக மாற்றுவதற்கு தமிழ்நாட்டில் 4 லட்சம் மீட்டர்கள் தேவை. இதற்கு ரூ.1200 கோடி நிதி தேவைப்படுகிறது, ஆகவே மேற்கண்ட நிதியினை வழங்க மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத் தொகை 98 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை 3 மாதத்தில் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும், மின்சார பயன்பாட்டினைத் துல்லியமாக கண்காணிப்பதற்கு வசதியாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1.4 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மீட்டர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.  எனினும் தமிழகத்தில் இவ்வாறு விநியோகம் தொடர வேண்டுமானால் பற்றாக்குறை முழுக்க தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும். தற்போது தேவைக்கும் குறைவான மின்சாரமே வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.


எதிர்வரும் கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் முழுமையாக வழங்கப்படவேண்டும், என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.