காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று முன்தினம் சந்தித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று அவருடைய இல்லத்தில் குஷ்பு சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதன்முறையாக சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தேர்தலில் எங்கள் கட்சி செயல்பட்ட விதம், தற்போது உள்ள நிலவரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். தற்போது தமிழகத்தில் 3-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது குறித்தும், கடந்த ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றம் பற்றியும் பேசினோம்.


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மீண்டும் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்யப்படுமா? என கேட்கிறீர்கள். கடந்த 2 ஆண்டுகளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சியை எந்த அளவுக்கு முன்னேற்ற பாதையில் கொண்டு வந்திருக்கிறார் என்பதை அனைவரும் பார்த்துள்ளோம். அவருடைய ராஜினாமாவை தொடர்ந்து சிறப்பாக செயல்படும் மற்றொருவரை சோனியாவும், ராகுல் காந்தியும் நியமிப்பார்கள். நான் இளங்கோவனுக்காக பணியாற்றவில்லை. காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுகிறேன். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யார்? என்பது குறித்து தலைமை விரைவில் அறிவிக்கும்.


காங்கிரஸ் கட்சி முன்பு கொண்டு வந்த திட்டங்களை அப்போது எதிர்த்துவிட்டு, இன்றைக்கு தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது அதையே காங்கிரஸ் கொண்டு வர நினைத்தது, காமராஜர் கொண்டுவர நினைத்தது என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். முதலில் எது நல்ல திட்டம்?, எது காங்கிரஸ் கொண்டு வர நினைத்தது? என்பது குறித்து பா.ஜ.க. முடிவு செய்யட்டும். ஒரு திட்டம் கொண்டு வரும் போது அதை எதிர்த்து விட்டு, இப்போது அத்திட்டத்தை நிறைவேற்றுவது போல பா.ஜ.க.வினர் பாசாங்கு செய்கின்றனர். இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் போது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று பாரம்பரியம், கலாசாரம் குறித்து சுற்றுலா மேற்கொள்ளும் பிரதமர் தான் இப்போது இருக்கிறார். முதலில் அவர் காஷ்மீர் நிலவரம் குறித்து பதில் அளிக்கட்டும் என்று அவர் கூறினார்.