இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் தலித் குடும்பங்கள்!
நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 70 தலித் குடும்பங்களும் இதேபோன்ற காரணத்திற்காக மதம் மாற முடிவு செய்துள்ளனர். இதனால் இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவுகிறது.
பழங்கள்ளி மேடு கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர ஐந்து நாள் கோவில் திருவிழாவில் தங்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. இது காலம் வரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து இவர்கள் கோவிலுக்கு வருவதற்கும், கோவில் விழாவில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனர். இனியும் பொறுக்க முடியாமல்தான் இவர்கள் மதம் மாற முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் தலித்துகள் பல இடங்களில் தாக்கபடுகின்றன. சமிபத்தில் குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் பிஹாரின் முசாபர் பூர் மாவட்டத்தில் 2 தலித் இளைஞர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரின் புகாரின் பேரில் 2 தலித் சகோதரிகள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில் நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுவடைந்தது வருகின்றன.