தமிழக முதல்வரின் `ஆசிரியர்தின` வாழ்த்து செய்தி!
தமிழக மக்களுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
"மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தாம் ஏற்ற பொறுப்புகளை திறம்பட வகித்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் கல்வி என்ற உயரிய லட்சியத்தை அடைந்திடவும், அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி சிறந்த கல்வி கற்றிடவும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், புத்தகங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் செயல்படுத்தியதால் நாட்டிலேயே தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கல்வி கற்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதே இதற்கு சான்றாகும்.
நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களை நல்ல குடிமக்களாக்கும் சிறப்புமிக்க பணியினை ஆற்றிடும் ஆசிரியர் பெருமக்களை கௌரவிக்கும் வகையில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி சிறப்பிப்பது, சிறந்த கல்வியை மாணாக்கர்கள் தங்குதடையின்றி பெற்றிடும் வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகளை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் ஆற்றி வருகிறது.
இந்த ஆசிரியர் தின நன்னாளில், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவச் செல்வங்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். "
என தெரிவித்துள்ளார்.