அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது: வானதி சீனிவாசன்
அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: வானதி சீனிவாசன்
பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை சிலிண்டர் வெடிப்பு மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு அதில் உள்ள தொடர்பு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவை குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் திடீர் கோவை வருகை குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “கோவை மாநகருக்கு நேற்று (அக்டோபர் 27) வருகை தந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், பா.ஜ.க. மீதும், தமிழக பா.ஜ.க. தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்கள் மீதும் பல தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
தீபாவளிக்கு முந்தைய தினம் அக்டோபர் 23-ம் தேதி கார்வெடிப்பு சம்பவம் நடந்து நான்கு நாட்கள், கோவை பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர், பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததும் கோவைக்கு பறந்து வந்திருக்கிறார்.
தீபாவளிக்கு முந்தைய தினம் அதிகாலை, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறியதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் இதனை 'சிலிண்டர் வெடிப்பு' எனக் கூறி மறைக்கப் பார்த்தார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு சென்று அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகே உண்மை வெளிவந்தது.
2019 ஈஸ்டர் நாளில், இலங்கையில் கிறிஸ்தவ சர்ச்சில் குண்டு வைக்கப்பட்டது போல, தீபாவளி நாளில் கோவையை தகர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்தது. ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 75 கிலோ வெடிப் பொருட்கள் உள்ளிட்ட தகவல்கள் மக்களின் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்கள், உண்மையை வெளிப்படுத்திய பிறகே, காவல் துறையும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. 'கோவையில் எந்த பதற்றமும் இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. பா.ஜ.க. தான் அரசியல் செய்து வருகிறது' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.
'கோவையில் 3,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர், புறநகர் பகுதிகளில் சுமார் 40 சோதனை சாவடிகள் அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் கடந்தும் விசாரிக்க வேண்டி இருப்பதால்தான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அதே பேட்டியில் கூறியிருக்கிறார்.
'கோவையில் எந்த பதற்றமும் இல்லை. இயல்பு நிலை தான் நீடிக்கிறது' என்றால் 3,000 போலீசார் ஏன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?
அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை அறியாமலேயே, 'கோவை பதற்றத்தில் இருக்கிறது. இயல்பு நிலை இல்லை' என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால்தான் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 40 சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
'மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசியல் பேச விரும்பவில்லை' என்று கூறிக் கொண்டே, முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பத்திரிகைகள், தொழில் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவரையும் மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்திருக்கிறது.
3,000 காவல் துறையினரை குவிக்க வேண்டிய அளவுக்கு, 40 சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டிய அளவுக்கு, மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானதால்தான், அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம்.
மேலும் படிக்க | இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்
அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அமைச்சர் இப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை இரு பக்கமும் அமர வைத்துக் கொண்டு, பதற்றத்துடன் பேட்டி அளிப்பதற்குப் பதிலாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். கோவையில் ஏன் கார் வெடித்து சிதறியது? அதில் உயிரிழந்தவரின் வீட்டில் எதற்காக 75 கிலோ வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள்? இதுபோன்ற நிலை ஏன் தமிழகத்தில் ஏற்பட்டது? இதனை எப்படி தடுப்பது? என்பது பற்றியெல்லாம் அமைச்சர் சிந்திக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறதே என்று கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க.தான். இதுவரை 200 நிர்வாகிகளை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன.
1998-ல் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான திரு. எல்.கே. அத்வாஜி அவர்களை கொல்வதற்காகத்தான், கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் இருந்தது. இப்போதும் தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்."
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ