CAA வேண்டாம்... கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வந்த MLA!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நிற டி-சர்ட் அணிந்து MLA தமிமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நிற டி-சர்ட் அணிந்து MLA தமிமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகை MLA-வும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி இன்று கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். மேலும் அவரது உடையில் CAA, NPR, NRC வேண்டாம் என குறிக்கும் வகையில் (no CAA, NPR, NRC-என) எழுதப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூடியதும், தனது கையில் தேசியக்கொடியுடன் வெளிநடப்பு செய்த தமிமுன் அன்சாரி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினார். அவரது முழக்கங்கள் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூட்டம் கூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. இன்று துவங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ஆளுநர், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174 (1) ன் கீழ் சட்டசபை கூட்டத்தை ஜனவரி 6-ஆம் தேதி கூட்டியுள்ளார். சட்டசபையில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்துவார் என குறிட்டிருந்தார்.
அந்தவகையில் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் துவங்கியது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் அளித்தார். அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.