சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரண்டாக அதிமுக உடைந்தது. ஒன்று ஈபிஸ் அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. அந்த சமயத்ததில் சசிகலாவும் சிறைக்கு சென்றார். பின்னர் ஈபிஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தனர். இதனால் கோபமடைந்த டி.டி.வி. தினகரன் தனியாக கட்சி தொடங்கி தேர்தலிலும் அதிமுகவுக்கு எதிராக களம் கண்டார். அவருடன் சில அதிமுக எம்எல்ஏ-க்களும் சென்றனர். அதில் ஒருவர் தான் தங்க தமிழ்ச்செல்வன். இவர் அமமுக கட்சியில் முக்கிய நபராக இருந்தார். மேலும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார்.


நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அமமுக கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அமமுக கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் கோபமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆடியோ குறித்து தங்க தமிழ்செல்வனிடம் கேட்டப்போது, கட்சியை பற்றி பேசியது உண்மைதான். அதற்கு என்னை அழைத்து கண்டித்திருக்க வேண்டியது தானே. சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது. நான் பேசியது உண்மைதான் என்றுக் கூறினார்.


இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், ஒழுங்கா இரு, இல்லையென்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்க தமிழ்ச்செல்வனை எச்சரிததாக டிடிவி தினகரன் கூறினார். 


இதற்கிடையில், தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளார் என்றும், திமுகவில் இணைய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படி தமிழக அரசியல் வட்டாரத்தில் பல சம்பவங்கள் நடைபெற்ற வந்த நிலையில், இன்று தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைந்து கொண்டார்.