உரிமத்துடன் செயல்படும் நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.


இதையடுத்து, TNMEDS.COM என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க கோரி, நீதிபதி மகாதேவன் முன் முறையிடப்பட்டது.


மேலும், உயர்நீதிமன்ற தடையால், உரிமம் பெற்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள்  பாதிக்கப்படுவதாகவும், தங்கள் நிறுவனம் மருந்துப் பொருட்களை வாங்கி விற்பனை மட்டுமே செய்வதாகவும், அந்த ஆன்லைன் மருந்து நிறுவனம் கூறியது.


இதை கேட்ட நீதிபதி மகாதேவன், உரிமம் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற  நிறுவனங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார். முன்னதாக, இந்த தடையை நீக்க கோரி ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.