காவிரி – கோதாவரி இணைப்பு திட்டம் மூலம் விவசாய நிலம் செழிக்கும்: EPS
காவிரி – கோதாவரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் வறண்ட நிலத்திலும் விவசாயம் செழிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
காவிரி – கோதாவரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் வறண்ட நிலத்திலும் விவசாயம் செழிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக முசிறியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு பிறகு வறட்சி பகுதிகளில் விவசாயம் செழிக்கும் என்று தெரிவித்தார். காவிரி உட்பட தமிழக நதிகளில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்க எத்தனை தடுப்பணைகள் தேவையோ அத்தனையும் கட்டித்தரப்படும் என்றும், அதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
சென்னை அருகே உணவுப்பூங்கா அமைந்த பிறகு ஆன்லைனில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்கலாம் என்றும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது கடந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடுமாறு கூட்டத்தினரை அவர் கேட்டுக்கொண்டார். ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பின் அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.