உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஒரு பகுதியாக கோவையில் நரசீபுரம் பகுதியிலுள்ள திரு. சாமிநாதன் அவர்களின் பண்ணையில்  இன்று(ஜூன் 5) மதியம் 3  மணிக்கு மரக் கன்று நடும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு எம்.பி திரு.சண்முக சுந்தரம், அரோமா நிறுவன நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி, சுவாமி அஜய் சைதன்யா, நொய்யல் டிரஸ்ட், மணிகண்டன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, வெள்ளியங்கிரி உழவன் FPO இயக்குனர் கிருஷ்ணசாமி, சிறுதுளி அமைப்பின் பொறுப்பாளர் திருமதி. வனிதா மோகன் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழாவில் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முக சுந்தரம் அவர்கள் பேசுகையில்,  “ ஈஷாவின் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூரில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. பசுமை பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இப்பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும். குறிப்பாக, நொய்யல் வடிநிலப் பகுதிகளிலும், அதில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய அதிகளவு மரங்களை நட வேண்டும். பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான இன்று என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.


கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்து வரும் ஈஷா,  காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது. தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.


அதன்படி, ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட்டன.  சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடுகின்றனர். இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


மேலும் படிக்க | ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் பிரம்மாண்டமான பலா திருவிழா! 2000+ விவசாயிகள் பங்கேற்பு!


நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் பணியில் ஈஷா!


கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை புத்துயிரூட்டும் பணியில் தமிழ்நாடு அரசுடன் ஈஷாவும் இணைந்து செயல்பட உள்ளது. அதன் தொடக்கமாக, நொய்யல் உற்பத்தியாகும் சாடிவயல் பகுதியில் முதல் 4 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சண்முக சுந்தரம் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுப்பட்டனர்.


‘நடந்தாய் வாழி காவேரி’ என்னும் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் இந்த நீண்ட கால பணியில் ஈஷா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் கரம்கோர்த்துள்ளன. அதன்படி, நொய்யல் நதியின் முதல் 4 கி.மீ தூரத்திற்கான பணி ஈஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் போன்ற அமைப்புகள் நொய்யல் நதியில் சாக்கடை கழிவுகள் சேர்வதை தடுப்பது, நீர் வளம் அதிகரிக்க நதியின் வடிநில பகுதியில் தேவையான எண்ணிக்கையில் மரங்கள் நடுவது, குப்பைகள் சேராமல் தடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளன. இதற்கு முன்பு  காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்  ‘பசுமை தொண்டாமுத்தூர்’ என்னும் பெயரில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலங்களில் 4 லட்சம் மரங்களை நடும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


காவேரி கூக்குரல் இயக்கம்


மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.


மேலும் படிக்க | விவசாயிகள் மனம் வைத்தால் போதும்... 242 கோடி மரங்கள் நடலாம் - காவேரி கூக்குரல் இயக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ