தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயிர்கள் கருகி விட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது.


தமிழகத்தில் வறட்சி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆய்வு நடத்த மத்திய குழு வந்தது. அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.


தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் வசுதா மிஸ்ரா தலைமையிலான மத்திய குழுவில் நிதி அமைச்சகத்தை சேர்ந்த நிதி ஆணைய ஆலோசகர் தீனா நாத், மின்சார அமைச்சக துணை இயக்குனர் சுமீத் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


இவர்களுடன் தமிழக முதன்மைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் இணைந்து சென்று வறட்சி பாதித்த இடங்களை பார்வையிடுகின்றனர்.


இதனைதொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. 


தூத்துக்குடி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.