தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணிகள் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியில் 14 ஆண்டு காலம் திமுக அங்கம் வகித்த போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தராமல், தங்களது ஆட்சியை மு.க.ஸ்டாலின் குறை சொல்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 


திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ் முனியாண்டியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை ரிங்ரோடு அருகே உள்ள விரகனூர் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது, தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்க திமுக வழிவகை செய்யவில்லை. மத்திய அரசில் தற்போது அதிமுக ஏதோ அங்கம் வகிப்பது போல் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்’ என்றார்.


ஐராவதநல்லூரில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். எத்தனை படித்த இளைஞர்களுக்கு ஸ்டாலின் வேலை வாய்ப்பு பெற்று தந்தார் என அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ் நாடு தான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வரும் 23 ம் தேதிக்கு பிறகு அத்தனை ஏழைகளுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.


மேலும், "மதுரையில் ஸ்டாலின் பாதுகாப்பாக  நடைபயணம் செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தெரிவித்த முதல்வர், கருணாநிதி ஆட்சிலேயே மதுரைக்கு பாதுகாப்பாக வர முடியாத ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தான் வருகிறார்" எனக் கூறியுள்ளார்.