சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி தொடங்கியது!
தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கட்டிடம் மொத்தம் 7 மாடிகள் கொண்டது. அனைத்தும் குளிர் சாதன வசதி கொண்டது. கடையின் மொட்டை மாடியில் கேண்டீனும், பணியாளர்கள் தங்கும் இடமும் உள்ளது. இங்கு இரவு காவல் பணியில் 10-க்கும் மேற்பட்ட காவலாளிகள் ஈடுபட்டனர்.
தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 14 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். 4 மணி நேரம் போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக ஊழியர்களை மீட்டனர்.
இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 2 ராட்சத ஜா கட்டர் வாகனங்களை கொண்டு இடிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ் நோக்கி இடிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியாகராயநகரில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவக் குழு வருகை வந்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தாமதமாகி இன்று காலை 11 மணியளவில் பணிகள் தொடங்கியுள்ளது.