கோட்டை அமீர் பதக்கத்தை புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது -DMK

“கோட்டை அமீர் பதக்கத்தை” தமிழக அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது என திமுக பொருளாளரும் - எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவத்துள்ளார்!
“கோட்டை அமீர் பதக்கத்தை” தமிழக அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது என திமுக பொருளாளரும் - எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவத்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்த “கோட்டை அமீர் பதக்கத்தை” இந்த குடியரசு தின விழாவில் வழங்காமல் புறக்கணித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகரத்தைச் சேர்ந்த கோட்டை அமீர், மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு, இந்துக்களும், முஸ்லீம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்று அயராது பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது இன்னுயிரைப் பறி கொடுத்தவர்.
நாட்டின் ஒற்றுமைக்கான அவரது பணியினைப் பாராட்டி, அவர் பெயரில் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப்பதக்கம்” அறிவிக்கப்பட்டு, அந்த பதக்கம் ஒவ்வொரு வருடமும் சமய நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஒருவருக்கு, குடியரசுதின விழாவில் வழங்கப்படும் என 15.5.2000 அன்று சட்டப்பேரவையில் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்த பதக்கம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி- இப்பதக்கம் பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொடுக்கப்படுகிறது.
வருகின்ற தேர்தலில் அமையப் போகும் “பா.ஜ.க. - அதிமுக கூட்டணிக்கு” அச்சாரமாகவும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு பயந்தும் “கோட்டை அமீர் பதக்கத்திற்கு” இந்த வருடம் யாரையும் தேர்வு செய்யாமலும், அந்த பதக்கத்தை யாருக்கும் வழங்காமலும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற உன்னத கோட்பாட்டின் ஒரு அடையாளமாக கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிலேயே இப்படியொரு வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவரை இழிவுபடுத்தியிருப்பதும் - சமய நல்லிணக்க உணர்வை கொச்சைப் படுத்தியிருப்பதும் மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஆகவே சமய நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவரை “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு” தேர்வு செய்து - அவருக்கு அந்த பதக்கத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூறும் வகையில் கோட்டை அமீரின் 25-ஆவது ஆண்டு மறைவு தினத்தை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.