மருத்துவ இடங்களில் 69% அடிப்படையில் 50% இடஒதுக்கீடு பெற திமுக போராடும்: MKS
திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் இடைதுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...!
திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் இடைதுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...!
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து ஒன்ராய் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "என்ன விலை கொடுத்தேனும் சமூகநீதியைப் பாதுகாக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட நெடிய போராட்டத்தில், இன்னொரு சாதனை மிளிரும் வெற்றியாக, மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் மருத்துவ இடங்களில் (முதுநிலை மருத்துவம் மற்றும் எம்பி.பிஎஸ்), 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.
READ | 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் எனக் கொண்டாடுவது மிகப்பெரிய மோசடி!!
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை அளித்தும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும், உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுத்தும், இந்த முதற்கட்ட வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். இப்போது 27% இடஒதுக்கீட்டினை அளிக்க மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 50 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும். சமூகநீதி என்ற இலட்சிய சங்கநாதத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம், எந்தச் சந்தர்ப்பத்திலும் அயர்ந்து விடாமல், அகில இந்திய அளவில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.