குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், மின் தடையை சரி செய்யவும் அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை டுமீங் குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தீ விபத்தில், 13 குடிசைகள் முற்றிலும் சேதமாகியுள்ளதாகவும் தேர்தல் விதிகள் நடப்பில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்றபின் விலையில்லா அரிசி, துணிமணிகள் போன்ற நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்  இங்கேயே குடியிருக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார். 


மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு பணத்தாசையும், பதவி ஆசையும் பெருகிவிட்டதாகவும், கமல் மதத்தை வைத்து அரசியல் நடத்தி வருவதாகவும் தெரிவித்த அவர், ஸ்டாலின் தமிழக அரசை குறைகூறவேண்டும் என்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் மின் தடங்கல்தான் ஏற்பட்டுள்ளதே தவிற மின் வெட்டு ஏற்படவில்லை என கூறிய அவர், திமுக ஆட்சியில் 20 மணி நேரம் மின் வெட்டு இருந்து வந்ததாக குறிப்பிட்டார். மேலும், கோடை காலத்தில் மின்பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால் அதை சமாளித்து தமிழக அரசு மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கி வருவதாகவும், சில பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், மழை வேண்டுமானால் மரங்கள் அதிக அளவில் நடப்படவேண்டும் எனவும் 5 கோடி மரங்கள் தமிழகத்தில் இருந்தால் தான் தமிழகம் சோலையாக மாறும் எனவும் தெரிவித்தார். மரங்களை வெட்டுவோருக்கு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க புதிய வீராணம் திட்டத்தின் மூலமும் மெட்ரோ மூலமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.