அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்: PMK
அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!
அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!
இதுகுயர்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 24&ஆம் தேதி முதல் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்தப் போராட்டத்தால் அப்பாவி ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் நியாயங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அவை நிறைவேற்றப்பட வேண்டியவையே.
மருத்துவ மேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு இந்திய மருத்துவக் குழு ஆணைப்படி ரத்து செய்யப்பட்டதும், அதை மீண்டும் பெற தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அனைவரும் அறிவார்கள். பறிக்கப்பட்ட 50% இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவம் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்வாறு மருத்துவர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழு அளிக்கும் அழுத்தத்தை அரசு ஏற்பது நியாயமல்ல. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளும் நியாயமானவை தான் என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் 3 வகையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருப்பதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைகள் தவிர வேறு எந்த பணிகளும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் கருவுற்ற பெண்களுக்குக் கூட மருத்துவம் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் உடற்கூறு ஆய்வுகள் கூட தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாக பல இடங்களில் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மூன்றாவதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலை தொடங்கிய 6 மருத்துவர்களில் இருவரின் உடல்நிலை மோசமாகி மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நால்வரும் உண்ணாநிலையை தொடரும் நிலையில் அவர்களின் உடல்நிலையும் மோசமடையும் ஆபத்து உள்ளது. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் அரசு பேசி சுமூகத் தீர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவே இவை சாத்தியமாகும். அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த ஜூலை மாதத்திற்கு பிந்தைய 6 மாதங்களில் மட்டும் மூன்று முறை போராட்டம் நடத்திய நிலையில், இப்போது நான்காவது முறையாக போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே இரு சுற்று பேச்சுகள் நடத்தப்பட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாக அறிகிறேன். இரு தரப்பும் இன்னும் சற்று நெகிழ்வுத் தன்மையை கடைபிடிக்கும் பட்சத்தில் தீர்வு சாத்தியமாகிவிடும்.
தமிழக அரசாக இருந்தாலும், அரசு மருத்துவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடமை மக்கள் நலனைப் பாதுகாப்பது ஆகும். அதற்கு யாராலும் ஊறு விளைவித்து விடக் கூடாது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் நிலையில், அவர் தலைநகரம் திரும்பும் வரை காத்திருக்காமல் அடுத்த நிலையில் உள்ளவர்கள் அரசு மருத்துவர்களுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.