சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 


அந்த மனுவில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை வினியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளதாகவும், டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலிண்டர் டெலிவரி செய்யும் போது கூடுதல் கட்டணம் (டிப்ஸ்) வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. டிப்ஸ் கேட்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆயில் நிறுவனங்கள் வருகிற 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.