முதலீட்டாளர் தமிழகத்தில் தொழில் துவங்க வரிசையில் நிற்பார்கள்- ஜெ., பேச்சு
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டதாக தி.மு.க., உறுப்பினர் ராஜா குற்றம்சாட்டினார்.
தமிழகத்தை விட்டு எந்த தொழில் நிறுவனமும் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதைக்குறித்து பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா:- தொழில்நிறுவனங்கள் தமிழகத்தை தான் நாடி வருகின்றன. தமிழகத்தை விட்டு வேறெங்கும் செல்ல விரும்புவதில்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதும் மற்றொரு காரணம்.
கர்நாடகா, ஆந்திராவுக்கு தொழில்நிறுவனங்கள் செல்வதாக திமுக சொல்வது தவறு. இரு மாநில முதல்வர்களும் சலுகைகள் அறிவித்தும் தமிழகத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் செல்லவில்லை. அவ்வாறு சென்ற தொழிற்சாலைகளின் பெயர்களை தெரிவிக்க முடியுமா? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை விட்டு தொழிற்சாலைகள் செல்லாது. வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில்துவங்க வரிசையில் நிற்பார்கள்.
தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய ரயில் பெட்டி ஆலை ஆந்திராவுக்கு சென்றது ஏன்? இதற்கான காரணத்தை தி.மு.க., விளக்க வேண்டும். மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பு தமிழகத்தில் நடக்காமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?
பெரும் தொழில்நிறுவனங்கள் கூட தமிழகத்திற்கு நோக்கிதான் வருகின்றன. அதிமுக ஆட்சியில் அதிகளவு அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது .கடந்த 5 வருடங்களில் 85 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்றார்.