அனல் பறக்கும் தேர்தல் களம் முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்- ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன்
தமிழக சட்டசபைக்கு மே16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடையும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவரான தொல்.திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். 2001 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகுமாரசாமியிடம் காலை 11.30 மணியளவில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மதியம் 1.30 மணியளவில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தொண்டர்களுடன் விஜயகாந்த் வருகை தந்தார். மதியம் 1.45 மணியளவில் தேர்தல் அலுவலர் முகுந்தனிடம் வேட்புமனுவை விஜயகாந்த் தாக்கல் செய்தார். இது விஜயகாந்த் போட்டியிடும் 3வது சட்டசபை தேர்தல். இதற்கு முன்பு விருதாசலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் கொளத்தூர்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். மதியம் 2 மணியளவில் கொளத்தூர் தொகுதி அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கார்த்திகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின். இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் திருவாரூர் தொகுதியில் மீண்டும் 2வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடும் பாமக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாசும் முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இப்படி அடுதடுத்து தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதால் தமிழக தேர்தல் களம் சூடு புடிக்க தொடங்கிருக்கிறது.