நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்: தமிழிசை
நீட் தேர்வை தமிழகத்தில் பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை தமிழகத்தில் பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 3 ஆண்டு காலமாக நாடு முழுவதும் உள்ளதைப்போல் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வை எதிர்கொண்டு சிறப்பான இடங்களை பெற்று வருகிறார்கள்.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்புக்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த காலங்களில் மத்திய தொகுப்புக்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை. இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது.
சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.
இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதிய 1 லட்சத்து 43,148 பேரில் 79,633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
அதில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வெழுதிய 17,067 பேரில் 11,121 பேர் பேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வெழுதிய 15,451 பேரில் 7,441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் தேர்வெழுதிய 15,216 பேரில் 9,219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
ஆந்திராவில் தேர்வெழுதிய 10,885 பேரில் 6,323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் தேர்வெழுதிய 9,712 பேரில் 4,173 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இந்திய அளவில் முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 79,633 பேரில் 11,121 பேர் என்று சொன்னால் இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டபடிப்புக்கு தேர்வாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் தான் சேரப்போகிறார்கள்.
நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம்
உதாரணத்திற்கு நெல்லையில் ஒரு எளிய குடும்பத்தில் துப்புரவு தொழிலாளரின் மகன், சென்னையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் சாதாரண டீ கடை நடத்தி வந்த ஏழை குடும்ப பெண்ணுக்கு மருத்துவம் படிக்க கிடைத்த அரிய வாய்ப்பு போன்ற பல உதாரணங்களை மறைக்க முடியாது.
அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது. அனிதாவின் சொந்த மாவட்டத்திலே கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வின் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது. பலரின் மருத்துவர் ஆகும் கனவும் நனவாகிறது.
நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
நீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில்தான் உருவானது. அதன் இறுதி வடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உருவானது. மோடி அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானது.
மோடியின் அரசை வெறும் நீட் தேர்வை மட்டும் வைத்து விமர்சிக்க வேண்டாம். நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.