ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை ADMK அரசுக்கே உரியது: EPS
ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக அலங்காநல்லூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் பழனிச்சாமி அறிவிப்பு!!
ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக அலங்காநல்லூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் பழனிச்சாமி அறிவிப்பு!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஜல்லிக்கட்டை மீட்டுத்தந்தது அதிமுக ஆட்சி என்றும் ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் அலங்காநல்லூரில் காளையை அடக்குவது போன்ற சிலை நினைவு சின்னமாக நிறுவப்படும் என தெரிவித்தார்.
அலங்காநல்லூரை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுக போன்ற பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் தர மாட்டோம் என்றும் எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக தருவோம் எனவும் கூறினார். மேலும், விவசாயிகளின் நிலையை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதாகவும், ஓடைகள், ஆறுகளில் தடுப்பணை கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அதிமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தியது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவிடாமல் கேரள அரசு இடையூறு செய்வதாகக் குறிப்பிட்டார். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று முன்னர் தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அதை நிறைவேற்றியதா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.