கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் நிதி, பெருந்தொழில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... உலக பொருளாதாரத்தில் கொரோனா நோய் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி செயல்பாடுகளை பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் அதிக முதலீடு செய்துள்ள ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் ''முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு'' ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.


இக்குழுவில், ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழகத்தில் உள்ள ஜப்பானிய தொழில் பூங்காக்களின் பிரதிநிதிகள், தமிழக அரசின் நிதி, பெருந்தொழில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.