கட்சியை உடைக்க DMK-வுடன் சேர்ந்து TTV சதி திட்டம்: EPS
பட்டாசுத் தொழிலை பாதுகாக்க அரசு எல்லா வகையிலும் துணைநிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!
பட்டாசுத் தொழிலை பாதுகாக்க அரசு எல்லா வகையிலும் துணைநிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து, சிவகாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். நாடு பாதுகாப்பாக இருக்கவும் வளம்பெறவும் மத்தியில் நிலையான ஆட்சியும், திறமையான பிரதமரும் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்றும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சிவகாசி பட்டாசுத் தொழில் நிறைந்த பகுதி என்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, பட்டாசு தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
பத்தாண்டு காலம் அதிமுக அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன் என்றும், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று திமுகவுடன் இணைந்து டிடிவி சதி செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். டிடிவி தினகரன், திமுகவின் பினாமியாக செயல்படுவதாகவும், ஆட்சியையும் கட்சியையும் குலைக்க நினைப்பவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். விருதுநகர் தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்தார்.
தென்காசி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லாதவர் என்று ஸ்டாலினை விமர்சித்த வைகோ, தற்போது அவரை முதலமைச்சராக்கப் போவதாக கூறி வருவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தாங்கள் செய்ததை சொல்லி வாக்கு கேட்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி பேசி வாக்கு கேட்பதாகவும் அவர் கூறினார்.