தமிழக அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்க தடையில்லை என இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அனைவருக்கும் சிறப்பு நிதியுதவியாக ரூ. 2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் ரூ.1,200 கோடியை ஒதுக்கியுள்ளது, மக்களுக்கு அந்த நிதியுதவியை கொடுப்பதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. 


இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த திட்டம் தொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ரூ. 2,000 சிறப்பு நிதியுதவி திட்டம், முதலில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு என்று கூறிவிட்டு,  தற்போது அனைத்து தரப்பினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு இந்த நிதியுதவி சேர 7 பேர் கொண்ட குழு என்று கூறிவிட்டு, 9 பேர் கொண்ட குழு எனத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசாணையை திருத்தியது குறித்து மக்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனவே, இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 


இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு, ரூ. 2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். முன்னதாக, 'தொழிலாளர்களுக்கு ரூ. 2,000 வழங்குவது தேர்தல் ஆதாயத்திற்கு வழிவகுக்கும். எனவே இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.