ஜல்லிக்கட்டு இனி தடை இல்லை -முதல்வர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மாநில அரசும், மத்திய அரசும் ஆலோசனைகளையும் நடத்தின. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை குறித்து பேசினார். பிறகு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். இன்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அவசர சட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி, ஆளுநர் இருவரின் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் கொண்டு வரப்படும். தமிழக மக்கள் விருப்பத்துக்கு ஏற்ற படி நாளை அல்லது நாளை மறூநாள் அவசர சட்டம் என்ற மகிழ்ச்சி செய்தி வரும் ஜல்லிகட்டு உறுதியாக நடக்கும். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்பார்த்த வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து வெளியே வரும். ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். ஜல்லிக்கட்டுக்கு தடை வர இனி வாய்ப்பு இல்லை என்றார்.
மேலும் செய்தியாளர் அவரிடம் ஜல்லிக்கட்டை நீங்கள் துவங்கி வைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உங்கள் விருப்பப்படியே அது நடக்கும் என்று ஓ பன்னீர் செல்வம் பதிலளித்தார்.