சென்னை: அதிமுக-வின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள் என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அவர்:-


சட்ட பேரவை நிகழ்வுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் கலவரம் செய்தவர்கள் தான் வெளியேற்றப்பட்டனர். உடலில் ஒரு கட்டி வந்தால், உடல் நலனைக் கருதி அந்த கட்டியை வெட்டி அகற்றுவது போலத்தான், சட்டப்பேரவையில் குறுக்கீடு செய்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்


சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்திற்கு எதிரானது. ரகசிய வாக்கெடுப்பு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களை ஏமாற்றும் செயலும்கூட. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க.வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


சபாநாயகரின் முடிவுகளில் ஆளுநரோ, மத்திய அரசோ தலையிட முடியாது. எம்.எல்.ஏ.க்களை சென்னையில் ஒரே இடத்தில் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு திரும்பி வராவிட்டால் என்ன செய்வது?


இவ்வாறு அவர் கூறினார்.