’தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம்’ வடக்கர்கள் வருகைக்கு எச்சரிக்கும் திருமா
வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வேலை வாய்ப்புக்காக என கருதக் கூடாது, அது இந்தி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க கோரியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யக் கோரியும் தமிழ்நாடு உருவான நவம்பர் முதல் நாளான இன்று துவங்கி 5 நாட்கள் தொடர் முழக்க கூட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர். முதல் நாளான இதில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பல்வேறு மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்கிற தேசியவாதத்தை கொண்டது காங்கிரஸ். பாஜகவும் தேசியவாதத்தை கொண்டதுதான். ஆனால் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என முன் வைக்கிறது.
மேலும் படிக்க | ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி - பின்னணி என்ன?
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஒரே மதத்தை, ஒரே கலாச்சாரத்தை ஒரே பண்பாட்டை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இது தான் பாஜக விரும்புகிற தேசியவாதம். மதவழி தேசியவாதம். மக்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். அரசு மதம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. கூட்டாட்சிக்கு எதிரானது தான் பாஜக பேசுகிற தேசியவாதம். இந்து தேசியம் என பேசி பன்மைத்துவத்தை மறுக்கிறார்கள். தமிழ் தேசியம் வளர்ந்தால் பன்மொழித்துவம் வளரும். அப்படி வளர்ந்தால் பாஜக விரும்புகிற இந்து தேசிய வாதத்தை இந்திய அளவில் கட்டமைக்க முடியாது. இதற்கு இடராக, நெருக்கடியாக, தடைக்கல்லாக இருப்பது கூட்டாட்சித் தத்துவம்.
அவர்களின் கருத்தியல் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் எந்த மக்களும் பேசாத இந்த மொழியை பேசுவதற்கும், ஆராய்ச்சி இருக்கைக்கும் கோடிக்கணக்கில் நிதிகளை ஒதுக்குகிறார்கள். தமிழ்நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக வட இந்தியர்கள் வருவதாக கருதக்கூடாது. இந்தி பேசக்கூடியவர்கள் இந்தியா முழுவதும் பரவலாக தொழிலாளர்களாகவோ, அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவோ இருப்பதால் தனித்து ஒரு தீவாக பிறமொழி மாநிலங்கள் மொழியை தக்கவைக்க முடியாது. இந்தி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான செயல் திட்டம்.
பிற்காலத்தில் இது தமிழ் பேசும் மாநிலம் என்று வரலாற்றில் கூறிவிடக் கூடாது என்பதற்காக பரவுகிறது. திட்டமிட்டு இந்தி பேசக்கூடியவர்கள் உயர் பதவிகளில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் பேசக்கூடிய மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உளவியல் கட்டமைக்கப்படுகிறது. மொழி வழி தேசியம் என்பது வலுப்பெற்றுவிடக் கூடாது என்பதற்கு நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பாஜகவுக்கு தயக்கம் உள்ளது.
மதச்சார்பின்மை என்பதில் அம்பேத்கரும், காந்தியும், நேருவும் ஒரே புள்ளியில் இருந்தார்கள். சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்ட காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதற்கு காரணம் மதச்சார்பின்மை பேசியது தான். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிரான கோட்பாட்டை கொண்டவர்களாக இருந்தாலும் கோரிக்கைகள் அவரிடமே வைக்க வேண்டும் அது தான் ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்திற்கு தரக்கூடிய மரியாதை", என்றார்.
மேலும் படிக்க | Crime: அதிமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்! அதிர வைத்த வாக்குமூலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ