திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் நேற்று அறிவித்தார். இதனுடன் சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மழை, தேர்தல் வழக்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.


திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இதேபோல் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது தமிழகத்தில் மழை காலம் தொடங்குவதாலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாலும் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.


திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்கக்கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


வழக்கத்தை விட 12 சதவீதம் அளவிற்கு, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் உள்ள திருவாரூர் கடந்த மூன்று ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மழை மற்றும் புயலால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் முடிவுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருவதால் தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.