சென்னை: காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனால் ஜனநாயக சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு விடுத்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுகுறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் ஜூலை 23 ஆம் தேதி காவிரிப்படுகை மாவட்டங்களில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கிறது. அத்துடன் விவசாயிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.


கடலூர் மாவட்டம் தியாகவல்லியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731சதுர கிலோமீட்டர் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரையில் 1,794 சதுர கிலோமீட்டர், பரங்கிப்பேட்டையிலிருந்து நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையுள்ள 3,674 சதுர கிலோமீட்டர் பகுதிகளை வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் இக்கூட்டியக்கத்தின் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் விடுதலை இயக்கம் ஆகியவை பங்கேற்கின்றன.


நமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் பெருவாரியாக பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.


இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.