சென்னை: ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்  பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். நேற்றிரவு வரை நீடித்த இந்தப் போராட்டம் விடிய, விடிய இன்று காலைவரை தொடர்ந்து  நடைபெற்று  வருகிறது.


முன்னதாக, நேற்றிரவு மெரினா கடற்கரை சாலையில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் திடீரென அணைந்ததால் இந்தப் போராட்டம் புதிய வடிவமாக கைபேசிகளில் உள்ள டார்ச் லைட்களை தீபம் போல் மிளிரவிட்டு போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். 


ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற உறுதி மொழியை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இன்று காலையில் இருந்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.


சென்னை நகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள மெரினா கடற்கரையை நோக்கி வருகின்றனர். 


நடிகர் மன்சூர் அலிகான், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் இங்கு குவிந்துள்ளதால் இன்றைய போராட்டத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.