போலி நாணயம், போலி ரூபாய், போலி தங்கம் எல்லாம் இப்போது பழையவையாகி விட்டன. இப்போது புதிதாய் வந்துள்ள போலியைப் பார்த்தால் ஆச்சரியம் ஏற்படலாம். பண்ருட்டியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) முன்னாள் மேலாளரின் மகன் உட்பட மூன்று பேரை, வங்கியின் போலி கிளையை நடத்தியதாக பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்ருட்டியைச் சேர்ந்த எஸ்.கமல்பாபு, 19, ஏ.குமார், 42, எம்.மணிக்கம், 52 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பண்ருட்டியில் SBI-க்கு இரண்டு வங்கிக் கிளைகள் உள்ளன. சகல உள்கட்டமைப்பு வசதிகளுடன் வங்கியின் போலி கிளை ஒன்று வடக்கு சந்தைப் பகுதியில் செயல்பட்டு வருவதாக வாடிக்கையாளர் ஒருவர் வங்கி அலுவலர்களை எச்சரித்துள்ளார். அதைத் தொடர்ந்து வங்கி மேலாளர், மண்டல அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார் என பண்ருட்டி காவல்துறை ஆய்வாளர் கே.அம்பேத்கர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை, குழு போலி வங்கியில் சோதனை நடத்தியது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் பண வைப்பு மற்றும் திரும்பப் பெறும் சலான்கள், பதிவேடுகள் மற்றும் ரப்பர் முத்திரைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களுடன் ஒரு போலி வலைத்தளத்தையும் அமைத்திருப்பது கண்டறியப்பட்டது. கமல் பாபுவின் தந்தை சையத் கலீல், எஸ்பிஐ முன்னாள் மேலாளராக இருந்தார். அவர் பணியில் இருந்தபோது, மாரடைப்பால் காலமானார் என்று திரு. அம்பேத்கர் கூறினார். பாபு, சையதின் மகன் என்ற முறையில் வங்கியில் வேலைக்கு முயற்சிசெய்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வங்கியின் அடிப்படை செயல்பாடுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். அதன் காரணமாக அவர் குமார் மற்றும் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து போலி கிளையை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த போலி கிளையில் எந்த பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த மூவருக்கும் எதிராக இந்திய பீனல் கோடின் பிரிவு 465 (மோசடிக்கான தண்டனை), 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் மோசடி செய்தல்), 473 (கள்ள முத்திரையை உருவாக்குதல் அல்லது வைத்திருத்தல்), 489 (காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சொத்துக்களை சேதப்படுத்துதல்) மற்றும் 109 (தூண்டுதலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.