கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை புலி.. சுற்றுலா தலம் மூடல்
உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது.
உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது. புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணித்த பின்னர் சனிக்கிழமை காலை மீண்டும் திறக்கபடும் என உதகை வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
சுற்றுலா நகரமான உதகைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிப்பதுடன் கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள பைன் மர காடு சுற்றுலா தளத்தையும் காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகளை பார்த்த பின்னரே உதகைக்கு வரும் நிலையில் இன்று காலை புலி ஒன்று திடீரென பைன் மரக்காடு சுற்றுலா தளத்திற்குள் வந்தது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில் அந்த புலி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலி வந்த இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்றும் நாளையும் பைன் மரக்காடு சுற்றுலாத்தளம் மூட உதகை வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதனை அடுத்து பைன் மர காடு சுற்றுலா தளத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணித்த பின்னர் சனிக்கிழமை காலை மீண்டும் திறக்கபடும் என உதகை வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.